வாகன சோதனையின்போது ரூ.300 கோடி போதைப்பொருள் சிக்கியது

தண்ணீர் கேன்களில் உயர்ரக போதை பவுடரை நிரப்பி இலங்கைக்கு கடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. பிடிபட்ட இந்த போதை பவுடர் ரூ.300 கோடி மதிப்புடையது என போலீசார் தெரிவித்தனர்.

Update: 2022-11-29 00:09 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு கடலோர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த காரில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்கள் 30 இருந்தன. அதில் அனைத்து கேன்களிலும் வெள்ளை நிற பவுடர் நிரப்பப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கேன்களை திறந்து அதில் இருந்த பவுடரை எடுத்து சோதித்தனர். அது போதை பவுடர் என தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

2 பேர் கைது

அந்த போதை பவுடரை காரில் ஏற்றி வந்ததாக கீழக்கரை சங்கிலி தெருவை சேர்ந்த நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஜெய்னுதீன் (வயது 45), அவரது தம்பி கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ்(42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். போதை பவுடர் கேன்கள், அதை ஏற்றி வந்த ஆடம்பர கார் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிப்பட்ட போதை பொருள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார்கூறியதாவது:-

300 கோடி ரூபாய்

தண்ணீர் கேன்களில் நிரப்பி கொண்டு வந்தது, கொக்கேன் ரக போதை பவுடராக இருக்கலாம் என தெரியவருகிறது. இதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும். இலங்கைக்கு கடத்துவதற்காக நூதன முறையில் தண்ணீர் கேன்களில் அடைத்து வேதாளை கடற்கரை பகுதிக்கு காரில் கொண்டு வந்துள்ளனர். இந்த கடத்தல் முயற்சியில் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருகிறோம். இவர்கள் ஏற்கனவே இதுபோன்று போதை பொருளை இலங்கைக்கு கடத்தி இருக்கிறார்களா? இலங்கையில் யாருக்கு அனுப்பி வைக்க இருந்தார்கள்? என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் தெரியவரும். குஜராத் மாநிலத்தில் இருந்து உரம் என்று சென்னை வழியாக கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்