சென்னையில் முக கவசம், கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்பனை

சென்னையில், கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2022-07-25 10:07 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னையில் கொரோனா தொற்று 2-வது அலையின் போது முக கவசங்கள் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்போது முக கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வதை தடுக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

என்95 முக கவசத்தின் விலை ரூ.22 ஆகவும், 2 அடுக்கு அறுவை சிகிச்சை முக கவசத்தின் விலை ரூ.3 ஆகவும், 3 அடுக்கு முக கவசத்தின் விலை ரூ.4 ஆகவும் அரசு நிர்ணயித்தது. அதேபோல் 200 மி.லி கிருமி நாசினியின் விலை ரூ.110, ஒரு ஜோடி கையுறைகள் ரூ.11, பிபீ கிட் விலை ரூ.273 என அரசு நிர்ணயித்தது. இந்த விலையை விட கூடுதல் விலைக்கு இவற்றை விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள மருந்து கடைகளில் தற்போது முக கவசங்கள், சானிடைசர்கள் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. சென்னையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது அரசின் விதிமுறைகள் ஏதும் கடைபிடிக்கப்படவில்லை. அங்கு ரூ.3 மற்றும் ரூ.4 மதிப்புள்ள முக கவசங்கள் வைத்திருந்தாலும் அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்காமல் மற்ற முக கவசங்களை ரூ.150 மற்றும் ரூ.200-க்கு விற்றனர். தரமான முக கவசங்கள் ரூ.200-க்கு தான் கிடைக்கும் என்று கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மருந்து கடை உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், 'கொரோனா தொற்று 2-வது அலையின் போது மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் இருந்தன. அதன்பிறகு உற்பத்தியாளர்களே சில்லரை விலையை உயர்த்திவிட்டனர். எனவே கையுறைகள் மற்றும் என்95 முக கவசங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்க முடியவில்லை' என்றனர். இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு சில மருந்து கடைகளில் முக கவசம் ரூ.250 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக கவசங்கள், கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்தால் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்