மாமந்தூர் நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் புகார்
மாமந்தூர் நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.;
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா மாமந்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பேரங்கியூர், இருவேல்பட்டு, அரசூர், மாமந்தூர், காந்தலவாடி, அரும்பட்டு, ஆலங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தினமும் 700-க்கும் மேற்பட்ட மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதிகாரி ஒருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு நெல் கொள்முதல் நிலையம் செயல்படவில்லை. ஆனால் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை குடோனுக்கு ஏற்றி செல்லாமல் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நேற்று முன்தினம் பெய்த மழையில் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 20 நாட்களாகியும் நெல் மூட்டைகளை எடை போடாததால் மன வேதனை அடைந்த விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து விவசாயிகளிடம் இருந்து வாங்கிய நெல் மூட்டைகளை எடைபோட்டு விசாயிகளுக்கு பணம் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.