கர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி ஆணையம் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- விவசாயிகள்

மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி ஆணையம் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-06-30 18:10 GMT

மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி ஆணையம் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ரவீந்திரன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

குறுவை தொகுப்பு திட்டம்

சேதுராமன்:- தூர்வாரும் பணிகள் முடிவடைந்த நிலையில் 'பி' சேனல் வாய்க்கால்கள், இணைப்பு வாய்க்கால்கள் பல இடங்களில் தூர்வாரப்படவில்லை. வயல்வெளி சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தம்புசாமி:- மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி ஆணையம் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ராமமூர்த்தி:- கொரடாச்சேரி பகுதியில் இதுவரை பல விவசாயிகளுக்கு மழை நிவாரணம் வந்து சேரவில்லை. குறுவை தொகுப்பு திட்ட பலன்கள் கூடுதல் பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடுபொருட்கள்

மருதப்பன்:- குறுவை சாகுபடிக்கான பயிர்க்காப்பீடு வழங்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் என பாகுபாடு இன்றி அனைவருக்கும் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.

குமார்:- குறுவை தொகுப்பு திட்டத்தில் உச்சவரம்பு ஒரு ஏக்கர் என்பதை 2 ஏக்கராக உயர்த்த வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

முன்னதாக சோழசூடாமணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசல் அரசூர் பாசன வாய்க்கால் நல சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்