சென்னையில் இனி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

Update: 2022-06-04 01:15 GMT

சென்னை,

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள், தமிழக அரசு சார்பில் நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னையில் முதல் முறையாக மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கில் ஜூன் 3-ந்தேதி(நேற்று) தொடங்கிய இந்த மலர் கண்காட்சி 5-ந்தேதி(நாளை) வரை 3 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வகைகளில் 4 லட்சத்திற்கும் அதிகமான கண்ணை கவரும் அழகிய மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சியை திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சியை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர். இதில் விலங்குகள், பறவைகளின் வடிவங்கள், அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான், கபிலரின் குறிஞ்சிப்பாட்டு மலர்கள் உள்ளிட்ட ஏராளமான அலங்கார வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தோட்டக்கலைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சென்னையில் இனி ஒவ்வொரு ஆண்டு மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று தெரிவித்தார். மலர் கண்காட்சியை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்