உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை
செலக்கரிச்சல் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை நடத்தினார்.;
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் கிராமத்தில் உள்ள ஒரு சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியில் பிரியாணி, பேக்கரிகளில் தரமற்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக சுல்தான்பேட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய புகார் சென்றது. இதனையடுத்து நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரி செலக்கரிச்சல் பகுதியில் உள்ள ஓட்டல்கள், கடைகள் மற்றும் பேக்கரிகளில் திடீரெனஆய்வு செய்தார்.
ஆய்வின்போது சமையலறை மற்றும் கடைகளில் கண்ட தூய்மை குறைபாடு உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு 3 கடைகளின் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், உணவு பண்டங்களில் கலப்படம் செய்யக்கூடாது. தரமற்ற உணவு பொருட்களை கொண்டு உணவு தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.