திமுக முன்னாள் எம்.பி.மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி கைது: பூர்விக சொத்துக்காக கொன்றது அம்பலம்.!

திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-13 04:05 GMT

சென்னை,

சென்னை, தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). இவரது மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நடக்க இருந்தது.

இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். முக்கிய பிரமுகர்களுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்து வந்தார். இதற்கிடையே 22 ந்தேதி இரவு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, சென்னையில் இருந்து காரில் சென்றார். காரை அவரது உறவினர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. கூடுவாஞ்சேரி அருகே கார் வந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மரணம் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் அவரது மகன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக போலீசார் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் செல்போன் உரையாடல் குறித்து விசாரித்த போது மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரது தம்பியான கவுசே ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்தனர்.

பூர்வீக சொத்து தகராறு, பணப்பிரச்சினையே மஸ்தான் கொலைக்கு முக்கிய காரணம் என்றும் 5 லட்சம் ரூபாய் கடனை திரும்ப கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் அண்ணை (மஸ்தான்) கொன்றதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலை வழக்கில் கைதான இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கொசே ஆதம்பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆதம்பாஷா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்