ரூ.5 கோடி வட்டியில்லா கடன் எனக் கூறி தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1.40 கோடி மோசடி

Update: 2023-09-03 07:18 GMT

சென்னை ராமாபுரத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருபவர் வீரமணி. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கோவாவில் உள்ள ஒரு கம்பெனிக்கு ரிசர்வ் வங்கி மூலம் ரூ.9 ஆயிரம் கோடி பணம் வரப்போகிறது என்றும், இதில் எனது கம்பெனியை மேம்படுத்த ரூ.5 கோடி வட்டியில்லாத கடன் பெற்று தருவதாக அனகாபுத்தூர் லட்சுமி தெருவை சேர்ந்த ரங்கராஜன் (38), கீழ்கட்டளை காசி விசாலாட்சிபுரம் சிந்து தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (48), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் (44) மற்றும் சிலர் கூறினார்கள். அவர்கள் ரிசர்வ் வங்கியின் போலி ஆவணங்களை காட்டி என்னை ஏமாற்றி ரூ.1.40 கோடி பெற்று மோசடி செய்துவிட்டனர்.' என்று பரபரப்பு தகவலை கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரங்கராஜன், சுரேஷ்குமார், ராஜேஷ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்