வாலிநோக்கம் பகுதியில் கடல் சீற்றம்

வாலிநோக்கம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கரைவலை மீன் பிடிப்பு பாதிக்கப்பட்டது.;

Update:2023-03-09 00:15 IST

சாயல்குடி, 

வாலிநோக்கம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கரைவலை மீன் பிடிப்பு பாதிக்கப்பட்டது.

கடல் சீற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. சாயல்குடி அருகே வாலிநோக்கம், மாரியூர், முந்தல், கீழ முந்தல், மூக்கையூர் உள்ளிட்ட பல ஊர்களிலும் மீன் பிடித்தொழிலை நம்பி ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊர்களில் இருந்து விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளிலும் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதை தவிர்த்து வாலிநோக்கம் கடல் பகுதியில் பாரம்பரிய கரை வலை மீன்பிடிப்பிலும் ஏராளமான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளிகாற்று வீசி வருகின்றது. இதனிடையே சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.

மீன்பிடி பாதிப்பு

கடல் அலையானது கரையில் உள்ள பாறைகளில் மோதி பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக சீறி எழுந்து வருகின்றன. கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் வாலிநோக்கம், மூக்கையூர், முந்தல், மாரியூர் கீழமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மற்றும் ஏராளமான சிறிய வத்தைகளும் மீன் பிடிக்க செல்லவில்லை.

மேலும் கடல் சீற்றமாக காணப்படுவதால் வலை சேதமாகும் என்பதால் வாலிநோக்கம் கடல் பகுதியில் கரை வலை மீன்பிடிப்பிலும் மீனவர்கள் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்