ஊட்டி மார்க்கெட்டில் புதிய கடைகள் கட்ட மேலும் ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு-நகராட்சி ஆணையாளர் தகவல்

ஊட்டி மார்க்கெட்டில் பழைய கடைகளை இடித்து புதிதாக கட்ட மேலும் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.;

Update:2023-08-26 01:00 IST

ஊட்டி

ஊட்டி மார்க்கெட்டில் பழைய கடைகளை இடித்து புதிதாக கட்ட மேலும் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

ஊட்டி மார்க்கெட்

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் சிறு, குறு விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர்.

இங்கு 1500 நிரந்தர கடைகளும் மற்றும் 500 தற்காலிக கடைகளும் உள்ளன. இந்த சந்தைக்கு தினமும் 3,500 முதல் 4000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வாரயிறுதி நாட்களில் சுமார் 5000 வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

அடிப்படை வசதிகள்

ஆனாலும் கடந்த சில வருடங்களாக அடிப்படை வசதிகள் மேம்படுத்தாததால் மழை பெய்தால் மார்க்கெட்டில் ஆறு போல் வெள்ளம் ஓடுகிறது. மேலும் வாகன நிறுத்தம் இல்லாதது, சுகாதாரமின்மை என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் மார்க்கெட்டில் 80 கடைகள் வரை சேதம் அடைந்தன. இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விரிவாக படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி புதிய கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. 1500-க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதால் 3 கட்டங்களாக இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மார்க்கெட்டை புனரமைக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் கூறியதாவது:-

ரூ.18 கோடி ஒதுக்கீடு

ஊட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டில் பழுதடைந்துள்ள மீன்கடை முதல் காய்கறி கடைகள் வரை உள்ள கடைகளை முழுவதுமாக இடித்து விட்டு, புதிதாக நவீன வசதியுடன்கூடிய கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டு பார்க்கிங் தளத்துடன் மீண்டும் கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டு தற்காலிக கடைகள் ஊட்டி ஏடிசி தளத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது 2-ம் கட்டமாக மார்க்கெட்டில் கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு ரூ.18 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முறை 300-க்கும் மேற்பட்ட கடைகள் இடித்து புதிதாக கடைகள் கட்டப்பட உள்ளது. நிதி அறிவிப்பு வந்து விட்டதால் உடனடியாக டெண்டர் அறிவித்து பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்