மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி வழிபாடு

வைகாசி அனுஷம் மற்றும் திருவள்ளுவர் திருநாள் இன்று (மே 24-ந்தேதி) கொண்டாடப்பட்டது.

Update: 2024-05-24 12:42 GMT

சென்னை,

 திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கருதப்படுகிறது. அதனால், அன்றைய தினம் தமிழர்களில் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மயிலாப்பூரில் 400 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்பட்டு வரும் திருவள்ளுவர் கோவில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமையான திருவள்ளுவர் சிலை இங்கு கிடைத்ததால், திருவள்ளுவர் இங்கு தான் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலை, இந்து சமய அறநிலைத்துறை பராமரித்து வருகிறது.

இந்த நிலையில், வைகாசி அனுஷம் மற்றும் திருவள்ளுவர் திருநாள் இன்று (மே 24-ந்தேதி) கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று வழிபாடு நடத்தினார். அப்போது, திருவள்ளுவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வள்ளுவர் சிலைக்கு தீப ஆராதனை செய்யப்பட்டது. பின்னர், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, வேட்டி, சட்டையில் வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவி கோவிலை சுற்றி பார்வையிட்டார். பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலிலும் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, கவர்னர் மாளிகை சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்

Tags:    

மேலும் செய்திகள்