கட்டுமான தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க பிரதமரிடம் கவர்னர் வலியுறுத்த வேண்டும்-நலவாரிய தலைவர் வேண்டுகோள்

கட்டுமான தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க பிரதமரிடம் கவர்னர் வலியுறுத்த வேண்டும் என நலவாரிய தலைவர் பொன்.குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-08-28 18:20 GMT

செயற்குழு கூட்டம்

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் மாநில தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான பொன்.குமார் தலைமை தாங்கினார். செயலாளர்கள் யுவராஜ், கண்ணன், பொருளாளர் ஜெகதீசன், மண்டல தலைவர் ராஜாராம், மாநில இணைச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, நல வாரிய தலைவர் பொன்.குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- கட்டுமானத்துறைக்கு தனியாக ஒரு அமைச்சரை மத்திய-மாநில அரசுகள் நியமிக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை நிரந்தரமாக கண்காணிப்பதற்கு பல தரப்பட்ட நபர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்.

28 சதவீத ஜி.எஸ்.டி.

பொதுமக்களிடம் அதிக வரவேற்பு காரணமாக அரசு நிறுவனம் தயாரிக்கும் வலிமை சிமெண்டு வினியோகம் செய்வதில் தட்டுப்பாடு உள்ளது. விரைவில் புதிய யூனிட் அமைத்து அரசு சிமெண்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் விவசாயத்துக்கு அடுத்து பெரும் தொழிலாக இருக்கும் கட்டுமான தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தமிழக கவர்னர் பேசியிருக்கிறார். அவரது பேச்சை வரவேற்கிறோம்.

கட்டுமான தொழிலுக்கு மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க கவர்னர், பிரதமரிடம் பரிந்துரைக்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2011-2020 வரை பல்வேறு உதவிகள் கேட்டு 6 லட்சம் கேட்பு மனுக்கள் வாரியத்துக்கு வந்திருந்தன. இதில், கடந்த ஓராண்டு காலத்தில் 5 லட்சம் பேருக்கு ரூ.420 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அனுமதி வழங்குவதில் சிக்கல்

வடமாநில தொழிலாளர்கள் அனைத்து தொழில்களையும் ஆக்கிரமித்துள்ளனர். அதை தடுக்க இயலாது. அவர்கள் கூடுதலாக இங்கு வருவதால் ஒரு பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு மற்றும் அரசு உயரதிகாரிகளிடம் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். எம்.சாண்ட் நிறுவனங்களை முறைப்படுத்த தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. அதை சரிசெய்யவும், கட்டுமான அனுமதி வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தவும் முதல்-அமைச்சரிடம் பேசி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்