உதய் உடன் வெளியே சென்றால் அண்ணன், தம்பியா என கேட்பார்கள்.. இதற்கு காரணம் உடற்பயிற்சிதான் - மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெற்ற "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

Update: 2022-08-21 10:12 GMT

சென்னை,

வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்த சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெற்ற "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்கள், குழந்தைகளுக்கிடையில் டென்னீஸ், கூடை பந்து, கைப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை அண்ணா நகரில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக பங்கெடுத்தனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்வில் பங்கெடுத்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், " ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சாப்பிடும் போது பசியோடு அமர வேண்டும், சாப்பிட்ட பின் பசியோடு எழுந்துகொள்ள வேண்டும். உடல்நலத்தை பேணிப் பாதுகாத்தால் கவலைகள், மன சங்கடங்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிவிடும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான் 2, 3 நாட்களில் குணமடைந்துவிட்டேன். அதற்கு காரணம் என் உடல்தான். எனக்கு கிட்டத்தட்ட 70 வயது ஆகிறது. ஆனால், பார்த்தால் அப்படி தெரியாது. நானும் என் மகனும் வெளிநாடுகளில் வெளியே சென்றால் அண்ணன், தம்பியா என கேட்பார்கள். அந்த மாதிரி என் உடல்நலத்தை பேணி பாதுகாக்கிறேன். ஜிம், யோகா, நடைபயிற்சி ஆகியவற்றை செய்கிறேன். எனவே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி செய்யுங்கள்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்