2-வது கட்டமாக 62 பள்ளிகளில் 8,567 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

கோவையில் 2-வது கட்டமாக 62 பள்ளிகளில் படிக்கும் 8,567 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.;

Update:2023-03-02 00:15 IST

கோவை, 

கோவையில் 2-வது கட்டமாக 62 பள்ளிகளில் படிக்கும் 8,567 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

காலை சிற்றுண்டி திட்டம்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்ட மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி, கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக கோவை மாநகராட்சியில் உள்ள 62 பள்ளிகளில் பயிலும் 7,255 மாணவ-மாணவிகளுக்கும், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள 9 பள்ளிகளில் பயிலும் 1,119 மாணவர்களுக்கும், மதுக்கரை நகராட்சியில் உள்ள 3 பள்ளிகளில் பயிலும் 730 மாணவர்களுக்கும் என மொத்தம் 74 பள்ளிகளில் 9,104 மாணவ-மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த காலை உணவு திட்டம் மேலும் பல பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக மாநகராட்சியில் உள்ள 59 பள்ளிகளில் பயிலும் 7,961 மாணவர்களுக்கும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 2 பள்ளிகளில் படிக்கும் 384 மாணவர்கள், மதுக்கரை நகராட்சியில் 1 பள்ளியில் பயிலும் 222 மாணவர்கள் என மொத்தம் 62 பள்ளிகளில் 8,567 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நேற்று கலெக்டர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி கோவை வரதராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் நடைபெற்றது.

இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் பங்கேற்று மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினர். இதில் மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாநகராட்சி கல்வி அலுவலர் மரிய செல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

17,671 மாணவர்கள் பயன்

இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கேரட் சேமியா உப்புமா, ரவை கிச்சடி, வெண் பொங்கல், கோதுமை ரவை கிச்சடி, சேமியா பீட்ரூட் உப்புமா, தினை பொங்கல், ஸ்வீட் கார்ன் ரவை உப்புமா, சேமியா கிச்சடி, தக்காளி ரவை உப்புமா, எலுமிச்சை சேமியா கிச்சடி உள்ளிட்டவை வாரத்தின் 5 நாட்களில் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தினால் கோவை மாவட்டத்தில் மொத்தம் 136 பள்ளிகளில் படிக்கும் 17,671 மாணவ-மாணவிகள் பயனடைகின்றனர் என்று கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்