முகநூல் பக்கத்தில் 'லிங்க்' அனுப்பி சுருட்டும் கும்பல்: மந்திர 500 ரூபாயை தொட்டால் ரூ.5 ஆயிரம் கிடைப்பதாக நூதன மோசடி

நூதன மோசடியால் மனைவியின் சம்பள பணம் முழுவதையும் கூலி தொழிலாளி இழந்துள்ளார்.

Update: 2024-05-24 01:25 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது 43). பெல்ட், மணிபர்ஸ் தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சினி (38). இவர், பள்ளி ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

வினோத், தனது செல்போனில் முகநூல் பக்கத்தை பார்த்து கொண்டிருந்தார். அதில், தமிழக முதல்-அமைச்சர் புகைப்படம் போட்டு "500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டு, வெற்றி பெறுங்கள். ரூ.5 ஆயிரம் கேஷ் பேக் பெறுங்கள்" என்ற வாசகத்துடன் கவர்ச்சியான திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதில் இருந்த 'லிங்க்'கை வினோத் 'கிளிக்' செய்தார். உடனடியாக அவரது செல்போனுக்கு உங்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வந்து இருப்பதாக குறுந்தகவல் வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வினோத், தனது 'ஜி பேயில்' வங்கி கணக்கு இருப்பை சரி பார்த்தார். அதில் இருந்த மனைவியின் சம்பள பணமான ரூ.4,650 மொத்தமாக எடுக்கப்பட்டு, வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மற்றொரு குறுஞ்செய்தியும் சிறிது நேரத்தில் வந்தது.

இதனால் வினோத் அதிர்ச்சியடைந்தார். சம்பள பணம் முழுவதையும் பறிகொடுத்ததால் கதறி அழுத கணவன்-மனைவி இருவரும் இந்த நூதன மோசடி குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். மோசடி கும்பல் முதல்-அமைச்சர் புகைப்படத்துடன் முகநூல் பக்கத்தில் மோசடியாக 'லிங்கை' அனுப்பி பணத்தை சுருட்டியது தெரிந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்