ஊட்டியில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து விபத்து - ஒருவர் பலி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-13 11:50 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மரவியல் பூங்கா முன்பு தனியாருக்கு சொந்தமான இடத்தில் 30 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தன. கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகீர் (23), ரிஸ்வான் (22) ஆகிய 2 தொழிலாளிகள் மண்ணில் புதைந்தனர்.

இதனை அறிந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு மண்ணில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் இருவரையும் மீட்டனர். இருவரும் உடனடியாக ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் ரிஸ்வானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரிஸ்வான் உயிரிழந்தார். ஜாகீர் நல்ல நிலையில் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 7ம் தேதி லவ்டேல் காந்திநகர் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டுமான பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்