வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த தங்கம், செல்போன் கொள்ளை போனதாக நாடகமாடியவரை அடித்து உதைத்து சித்ரவதை - 4 பேர் கைது

வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த தங்கம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனதாக நாடகமாடியவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-31 08:21 GMT

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ரசூல் கனி (வயது 56). இவர், மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், அந்த நிறுவனம் சார்பில் கடந்த மாதம் துபாயில் இருந்து 2 கிலோ தங்கம், லேப்டாப், விலை உயர்ந்த செல்போன் மற்றும் பொருட்களுடன் திருச்சி வந்தார்.

பின்னர் அங்கிருந்து காரில் சென்னை வந்த அவரை, மதுராந்தகம் அருகே வந்தபோது ஒரு கும்பல் தாக்கி கொள்ளையடித்து சென்றதாக தனது நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அதனை நம்ப மறுத்த நிறுவன ஊழியர்கள், ரசூல் கனியை மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் அடைத்து வைத்து சரமாரியாக அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.

அப்போது ரசூல்கனி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ெகாள்ளை நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் படுகாயம் அடைந்த ரசூல்கனியை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதையடுத்து மதுராந்தகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ தங்கத்தை மட்டும் பறிமுதல் செய்தனர். மற்ற பொருட்கள் எங்கு மறைத்து வைக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

இதற்கிடையில் ரசூல் கனியின் மனைவி ஜகுபர் நிஷா, துபாய்க்கு சென்று வந்த கணவர் வீட்டுக்கு வராததால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாயமான கணவரை மீட்டு தரக்கோரி புகார் அளித்தார்.

அதன்பேரில் வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக ரசூல்கனி பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர்களான அப்துல் சலாம் (40), அப்துல் ரகுமான் (36), அப்துல்வதுர் (40), அப்துல் குத்தூஸ் (40) ஆகிய 4 பேரிடம் விசாரித்தபோது, கொள்ளை போனதாக நாடகமாகி ரசூல்கனியிடம் இருந்து தங்கம் மற்றும் பொருட்களை வாங்குவதற்கு அடித்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. 4 பேரையும் ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்