தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்.. கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்

கால்நடைகளை போற்றும் வண்ணம், தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-16 02:40 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தைப்பொங்கல் தினத்தில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வண்ணம், பொங்கல் படையலிட்டு அனைவரும் வணங்கினர். அதனை தொடர்ந்து 2ம் நாளில் மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.

விவசாயிகளின் நண்பன், உழவனின் உயிர்த்தோழனாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் வகையில் விருந்து படைத்து, நன்றிக்கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். பொங்கல் பொங்குவதால் பட்டி பெருகும் என்பது ஐதீகம்.

அதன்படி.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாட்டு பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, வேளாண்மைக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து அதன் உரிமையாளர்கள் கால்நடைகளை குளிப்பாட்டினர். பின்னர், மாடுகளின் கொம்புகளை சீவி, வர்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிட்டு அழகு சேர்த்தனர். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறு பூசி, குங்குமப்பொட்டு வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கலுக்கு தயாராகினர். பின்னர், வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்