அமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி

5 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Update: 2023-08-12 09:31 GMT

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப அனுமதிக்கக்கோரி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ஒப்புதல் அளித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார். 5 நாட்கள் காவல் முடிவடைந்ததும் செந்தில்பாலாஜியை 12-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார், உதவியாளர் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 300-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களை காட்டிதான் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்டு விசாரணை நடைபெற்றது. செந்தில் பாலாஜி ஆம்.., இல்லை.. என்று பதில் சொல்லும் வகையில் அமலாக்கத்துறையினர் கேள்விகளை முன்வைத்து இருந்தனர்.

இந்த நிலையில், 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல் முடிவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதையொட்டி, செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்