இலங்கைக்கு படகு போக்குவரத்து தொடங்க வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி - அமைச்சர் எ.வ.வேலு

இலங்கைக்கு தொடங்க உள்ள படகு சேவைக்கு வெளியுறவு அமைச்சகம் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக குஜராத்தில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக்குழும கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2023-08-19 20:47 GMT

 மேம்பாட்டுக்குழும கூட்டம்

19-வது கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக்குழும கூட்டம் குஜராத் மாநிலம் கெவடியாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்த சோனாவால் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலோர மாநிலங்களை சேர்ந்த துறைமுக மந்திரிகள், மத்திய-மாநில அரசுகளின் அதிகாரிகள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்கு பெற்றனர். தமிழ்நாட்டின் சார்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.

சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களுக்கு சாலை மற்றும் ரெயில் இணைப்பு, தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம், இந்திய துறைமுகங்கள் சட்ட வரைவு, மிதக்கும் தோணித்துறை, கடல் விமான செயல்பாடுகள் மற்றும் இந்திய கடலோர காவல்படை நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதங்களை தொடர்ந்து கடலோர மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள் உரையாற்றினார்கள்.

பச்சைக்கொடி

கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக்குழும கூட்டத்தில் எ.வ.வேலு பேசியதாவது:-

தமிழ்நாடு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையை கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுக துறையை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலா திட்டத்தின்கீழ், மானியமாக தமிழ்நாடு கடல்சார் வாரியத்துக்கு சுமார் ரூ.120 கோடி நிதியுதவி அளித்த மத்திய மந்திரிக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவை சர்வதேச அளவில் இணைக்கும் வகையில் இலங்கைக்கு தொடங்க உள்ள முதன்மையான படகு சேவைக்கு வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வதேச பயணிகள் படகு சேவையானது, நீண்ட காலமாக பகிரப்பட்ட வரலாறு மற்றும் ஆழமான கலாசார உறவுகளை கொண்ட இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். நாடுகளுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் மேம்படுத்தும். கூடிய விரைவில் பலன் கிடைக்கும் வகையில், இந்த படகு சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது.

நீல பொருளாதாரம்

ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1980-ம் ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருந்த இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும். கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒருங்கிணைந்த முடிவுகளுக்காக, ஆற்றல், தொழில்துறை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட கடலின் பல பங்காளர்களை ஒன்றிணைக்கும் கடல் இடஞ்சார்ந்த திட்டமிடலில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.

கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். அதன் நீண்ட கடற்கரையை பயன்படுத்தி கடலோர சுற்றுலா, பொழுதுபோக்கு கடல்நீர் விளையாட்டுகளை வழங்குவதன் மூலம் நீல பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்