நடராஜர் கோவில்"கனகசபை நடைமுறை" தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு

நடராஜர் கோவிலில் கனகசபை நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2023-10-14 09:32 GMT

சென்னை,

சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனக சபையில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் 17ம் தேதி அன்று அரசாணை வெளியிட்டு இருந்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் பொதுநல  மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இதில் சோழமன்னர்களால் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பங்களிப்பினால் நிர்வகிக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒரு பொது கோவில் என்றும் அது தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல என்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்பளித்துள்ளதாகவும், மேலும் கனக சபையில் இருந்து தரிசனம் செய்வது ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டுவருவது, அது கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் கனக சபையில் இருந்து தரிசனம் செய்வதற்கு அனுமதியளிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் அரசை முடிவெடுக்க அறிவுறுத்தியிருந்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்து இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது என்றும் விளக்கமளித்து இருந்தது. மேலும் இதனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம் கனக சபையில் மாற்றம் செய்ய தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை மனுவிற்கு பதில் மனு அளிக்க மனுதாரருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்