தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது

கடலூர் மாவட்டத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-11-02 18:45 GMT

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர், செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக்கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், வங்கி வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணப்படும். எனவே பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவர்களுடைய வக்கீல்கள் மூலம் வழக்குகளை மக்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து சமரசம் பேசி தீர்வு காணலாம். நீதிமன்றங்களில் நிலுவையில் அல்லாத வங்கிக்கடன் வழக்குகளும், நேரடியாக மனுக்கள் கொடுத்தும் மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் நாளன்று சமரசம் பேசி வழக்குகளை முடித்துக்கொள்ளலாம். இதேபோல் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் வருகிற 12-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றங்கள் மூலமாக சமரசம் செய்து வைக்கப்படும் வழக்குகளால் காலவிரயம், பணவிரயம் தவிர்க்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். இதில் சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்