என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.;
சென்னை,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) 300 பயிற்சி பட்டதாரி என்ஜினீயர்களை கேட் தேர்வின் அடிப்படையில் நியமிக்க உத்தேசித்துள்ளது.
இது கடந்த காலங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் இருந்து மாறுபட்டுள்ளது. கடந்த காலங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க நடவடிக்கைகளுக்காக நிலங்களை வழங்கியவர்களின் குடும்பத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.
ஆட்சேர்ப்பு நடவடிக்கை
ஆனால், என்.எல்.சி. தற்போது கேட் தேர்வு மூலம் 300 பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர்களை தேர்வு செய்ய இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நடைமுறையை கைவிட்டு என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மே 5-ந் தேதி தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன்.
இருந்தபோதிலும், கேட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை என்.எல்.சி. நிறு வனம் மேற்கொண்டுள்ளது.
நியாயமற்றது
அதன்படி, இந்த பணிக்கு 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தேர்வு நடைமுறை நியாயமற்றது. இது, உள்ளூர் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த தேர்வு நடைமுறை மூலம் என்.எல்.சி. திட்டத்துக்காக நிலம் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வேலை வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பது அந்த மக்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும்.
முன்னுரிமை
எனவே, சிறப்பு தேர்வு அடிப்படையில் என்.எல்.சி. திட்டத்துக்கு நிலம் வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
என்.எல்.சி.யின் செயல்பாடுகள் தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்டிருப்பதாலும், பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருப்பதாலும் பணியாளர்கள் அதிகமாக அதே பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டால் பொருத்தமானதாக இருக்கும்.
எனவே, என்.எல்.சி. நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் சாதகமான முடிவை விரைவில் எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.