வனத்துறையிடம் ஒப்படைக்க எதிர்ப்பு:அரசு வழங்கிய நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும்:கலெக்டரிடம் மலைக்கிராம மக்கள் கோரிக்கை

Update: 2023-03-21 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, போடி அருகே கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட டாப்ஸ்டேஷன் மலைக்கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று வந்தனர். கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "டாப்ஸ்டேஷன், சென்டிரல் மலைக்கிராமங்களில் 7 தலைமுறைக்கும் மேலாக 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். மிகவும் பின்தங்கிய சூழலில் வாழ்ந்து வரும் எங்களுக்கு கடந்த 2003-2004-ம் ஆண்டில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2½ ஏக்கர் வீதம் அரசு நிலம் கொடுத்தது. அதற்கான நிலத்தை இதுவரை எங்களுக்கு அளந்து கொடுக்கவில்லை. பலமுறை முறையிட்டும் எங்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்கவில்லை.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது. தற்போது அந்த நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை. வனத்துறையும், அங்குள்ள தனியார் நிறுவனமும் எங்களுக்கு பல வகைகளில் இடையூறு கொடுத்து வருகின்றனர். எனவே, எங்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்கவும், வனத்துறை மற்றும் தனியார் நிறுவனத்தால் எங்கள் வாழ்வாதாரத்துக்கும் இடையூறு ஏற்படாமல் தடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்