மப்பேடு முதல் பண்ணூர் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு முதல் பண்ணூர் வரை இருந்த இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-05-06 07:40 GMT

திருவள்ளூர் உட்கோட்டம் மேற்கு பிரிவில் உள்ள வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், கீழச்சேரி செல்லும் 3 மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ.76 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது மப்பேடு முதல் பண்ணூர் வரை 9.2 கி.மீ. தூரத்திற்கு இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விறு, விறுப்பாக நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது. இந்த சாலை விரிவாக்கம் காரணமாக சென்னையிலிருந்து திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டம் வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு எளிதில் வாகனங்களில் செல்ல முடியும். அதே நேரத்தில் செல்லக்கூடிய தூரமும் குறைந்து நேரமும் மிச்சமாகும். தற்போது சுங்குவார்சத்திரத்திலிருந்து மப்பேடு வரை இரு வழிச் சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதால் நீண்ட தூரம் சுற்றிவராமல் சுங்குவார்சத்திரத்திலிருந்து மப்பேடு வந்து அங்கிருந்து திருவள்ளூர் வழியாக சென்னைக்கோ, ஆந்திராவுக்கோ எளிதாக செல்ல முடியும்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு முதல் பண்ணூர் வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் பி.செந்தில் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இரு வழி சாலையை அகலப்படுத்துவதற்காக அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக சாலையை அகலப்படுத்திய பிறகு புதிய மரக்கன்றுகளை தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகர் நடவு செய்தார். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஏ.எஸ்.விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ஜெ.தஸ்நேவிஸ் பெர்ணான்டோ, உதவி பொறியாளர் பிரவீன் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்