ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது கட்டாயம் பத்திரப்பதிவுத்துறையின் செயல்பாடுகள் என்ன?

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது கட்டாயம் பத்திரப்பதிவுத்துறையின் செயல்பாடுகள் என்ன?

Update: 2022-11-23 20:59 GMT

சேலம், 

தமிழகத்தில் மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் முக்கிய துறையாக பத்திரப்பதிவுத்துறை திகழ்கிறது. இந்த துறையின் மூலம் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு, திருமணப்பதிவு, திருமண சான்று, வில்லங்க சான்று, பிறப்பு-இறப்பு சான்றிதழ், சங்கம் பதிவு, சீட்டுப்பதிவு மற்றும் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை பெற முடியும்.

வாரத்தில் 6 நாட்கள் வேலை

கடந்த காலங்களில் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் மட்டும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. பொதுமக்களின் வசதிக்காக தற்போது சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்கள் இந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறையில் பொது உபயோகத்திற்காக பல ஆன்லைன் சேவைகள் உள்ளன. சொத்து வழிகாட்டி மதிப்புகள், வில்லங்க பதிவுகள், முத்திரை தாளுக்கான ஆன்லைன் கட்டணம், பத்திர முன்பதிவு போன்ற பல அம்சங்கள் சேவைகளாக வழங்கப்படுகின்றன. tnreginet.gov.in என்ற இணையதளம் மூலமாக பத்திரப்பதிவு சேவைகளை பெறமுடியும்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு

சேலம் மாவட்டத்தில் சேலம் கிழக்கு, சேலம் மேற்கு ஆகிய மாவட்ட பதிவாளர் அலுவலகங்களும், சூரமங்கலம், தாதகாப்பட்டி, மேட்டூர், மேச்சேரி, தாரமங்கலம், தலைவாசல், ஏற்காடு, சங்ககிரி உள்பட 25 சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகங்களில் பத்திரப்பதிவு, திருமணப்பதிவு, பத்திர நகல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எந்த ஒரு பதிவு அல்லது சான்றிதழ் பெற வேண்டும் என்றாலும் அதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.

அதாவது, tnreginet.gov.in என்ற இணையதளம் மூலமாக பத்திரவுப்பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளை பெறமுடியும். ஆனால் அரசு உரிமம் பெற்ற முத்திரைத்தாள் விற்பனையாளரை தொடர்பு கொண்டால் மட்டுமே மோசடியை தவிர்த்து நேர்மையான முறையில் பத்திரவுப்பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வில்லங்க சான்றிதழ்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சொத்துக்களின் வில்லங்கங்களை இணையத்தில் சரிபார்க்க முடியும். பத்திரவுப்பதிவு துறையின் இணையதளத்தில் சென்று வில்லங்கம் சரிபார்க்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். பிறகு வில்லங்கம் அல்லது பத்திரப்பதிவை தேர்வு வேண்டும். வில்லங்கத்தை தேர்வு செய்தால் சொத்தின் மண்டலம், மாவட்டம், சார் பதிவாளர் அலுவலகம், கிராமம், மற்றும் தேர்வு செய்யும் ஆண்டுகள், சர்வே எண், உட்பிரிவு போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஆனால் தற்போது 1987-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்த விவரங்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம்.

பத்திரப்பதிவுத்துறையானது 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்வதுடன் அரசு நிர்வாகத்திற்கு தேவையான நிதியை திரட்டி தருவதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து ஒளிவு மறைவற்ற சேவையை துரிதமாக செய்ய உதவுகிறது.

சர்வர் பிரச்சினை

பத்திரப்பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து மூங்கில்பாடியை சேர்ந்த அய்யர் கூறுகையில், பத்திரப்பதிவுத்துறையில் பதிவுக்காக பயன்படுத்தப்படும் சர்வரின் வேகம் கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளது. பதிவுத்துறை சர்வருக்குள் நுழைந்தால் அடுத்தடுத்து பக்கங்களுக்குள் செல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இணையதளம் பக்கம் திறந்தால் அதில் பதிவேற்றம் செய்யமுடிவதில்லை. இதனால் 5 நிமிடத்தில் முடிக்க வேண்டிய பதிவுக்கு சுமார் 1½ மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, சர்வர் பிரச்சினையை சரி செய்தால் அனைத்து பணிகளும் விரைந்து நடைபெறும், என்றார்.

வெளிப்படையாக...

சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த ஜலகண்டாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில், எனது சொத்திற்கு வில்லங்க சான்றிதழ் பெற வந்தேன். ஆனால் வில்லங்க சான்றிதழை ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சர்வே நம்பரை சொல்லி ஆன்லைன் மூலமாக வில்லங்க சான்றிதழை உடனடியாக பெற்றுக்கொண்டேன். அலுவலகத்தில் புரோக்கர் நடமாட்டம் இல்லை. அனைத்து பணிகளும் வெளிப்படையாக நடக்கிறது, என்றார்.

அதிகளவில் வருவாய்

சேலத்தை சேர்ந்த சத்திய நாராயணன் கூறுகையில், அரசுக்கு அதிகளவில் வருவாய் தரும் முக்கிய துறையாக பதிவுத்துறை உள்ளது. இதற்கு முன்புவிட தற்போது அனைத்து சேவைகளும் எளிமையாக உள்ளது. சேலம் சுற்றுவட்டார பகுதியில் 1000 சதுரடி நிலத்தை கிரையம் செய்ய வேண்டும் என்றால் இதற்கு முன்பு ரூ.30 ஆயிரம் செலவு ஆகும். ஆனால் தற்போது பத்திரப்பதிவு கட்டணம் ரூ.50 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. எனவே, பதிவுக்கட்டணத்தை குறைக்க வேண்டும். பத்திரப்பதிவு துறையில் அனைத்து பணிகளுக்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதனால் எவ்வித முறைகேடும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்