குழந்தை கடத்தலை தடுக்க 'ஆபரேசன் பிங்க்' திட்டம்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தலை தடுக்க ‘ஆபரேசன் பிங்க்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் குழந்தைகளை அடையாளம் காண கால்ரேகையும் பதிவு செய்யப்படுகிறது.;

Update:2023-08-09 03:30 IST


பொள்ளாச்சி


பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தலை தடுக்க 'ஆபரேசன் பிங்க்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் குழந்தைகளை அடையாளம் காண கால்ரேகையும் பதிவு செய்யப்படுகிறது.


குறும்படம் மூலம் விழிப்புணர்வு


பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல பகுதிகள் உள்பட 19 மருத்துவ துறை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் குழந்தைகள் கடத்தல் சம்பவத்தை தடுப்பது, குழந்தை காணாமல் போனால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குறும்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.


இந்த படம் மூலம் நோயாளிகளுக்கும், ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த குறும்படத்தில் ஒரு மூதாட்டி ஒருவர், ஒரு பெண்ணையும், குழந்தையையும் நன்றாக கவனித்து கொள்வது போன்று நடிக்கிறார். பின்னர் அந்த பெண் அயர்ந்து தூங்கும் போது, குழந்தையை வெளியில் கொண்டு வந்து ஒருவரிடம் ஒப்படைக்கிறார்.


'ஆபரேசன் பிங்க்'


இதற்கிடையில், குழந்தை காணாமல் போனது குறித்து தகவல் அறிந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் 'ஆபரேசன் பிங்க்' என்கிற தகவலை மைக் மூலம் தெரிவிக்கின்றனர். இதையடுத்து நுழைவு வாயில் மூடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் அந்த குழந்தையை மீட்டு தாயுடன் ஒப்படைப்பது போன்ற காட்சிகள் உள்ளன.


இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது:-


பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மாதந்தோறும் சுமார் 250 முதல் 300 பிரசவங்கள் நடக்கிறது. குழந்தை இல்லாத தம்பதியினரிடம் கடத்தல்காரர்கள் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்கின்றனர். பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் இதுவரைக்கும் 3 குழந்தைகள் கடத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவத்தை தடுக்க ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஆபரேசன் பிங்க் என்கிற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குழந்தைகள் கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும் அங்கு பணியில் இருக்கும் டாக்டர், செவிலியர்கள் மைக் மூலம் 'ஆபரேசன் பிங்க்' என்று தெரிவிப்பார்கள்.


இதை கேட்டதும் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் அங்குள்ள காவலாளிகள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்படும். ஆஸ்பத்திரியில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாதவாறு நுழைவு வாயில் மூடப்படும். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்படும்.


கண்காணிப்பு கேமராக்கள்


இதற்காக குழந்தைகள் பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களும், மற்ற பகுதியில் 36 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.


மேலும் பிரசவம் ஆனதும் தாயின், குழந்தையின் கைகளில் ஒரு எண் பதித்த டேக் போடப்படும். மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ளது போன்று காணாமல் மற்றும் கடத்தப்படும் குழந்தைகளை கண்டுபிடித்ததும் அந்த குழந்தையை உறுதிப்படுத்தும் வகையில் குழந்தைகளின் கால் ரேகையை எடுத்து மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் தாய்மார்களுக்கும் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்