நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-04-20 01:48 GMT

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் ஓட்டுப்போட தகுதியானவர்கள். அனைவரும் வாக்களிக்க வசதியாக தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கோடை வெயில் வாட்டுவதால், காலையிலேயே அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். பின்னர் நண்பகல் மற்றும் மதிய நேரத்தில் பல இடங்களில் மந்தமான வாக்குப்பதிவு காணப்பட்டது. மாலையில் மீண்டும் வேகமெடுத்தது.

முதல் முறை வாக்காளர்கள், கைக்குழந்தையுடன் வந்து வாக்களித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட முதியவர்கள் என பல தரப்பட்டவர்களும் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். முதல் முறை வாக்காளர்கள் பலரும் வாக்களித்ததும் மை வைக்கப்பட்ட விரல்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இவ்வாறு விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் அப்போதும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. எனவே 6 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து, 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. சென்னையில் 3 தொகுதிகளிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்