பள்ளி தலைமை ஆசிரியையை பணியிட மாறுதல் செய்யக்கோரி மனு

பள்ளி தலைமை ஆசிரியையை பணியிட மாறுதல் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-08-02 19:15 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதா தலைமையில் உறுப்பினர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது முதன்மை கல்வி அலுவலர் இல்லாததால், அவரது நேர்முக உதவியாளர் (மேல்நிலைப்பள்ளி) ரமேசிடம், அவர்கள் மனு கொடுத்தனர். அதில், அந்த பள்ளியில் கடந்த 29-ந்தேதி நடந்த பள்ளி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டத்தில், பள்ளியில் உள்ள சில குறைகளை கோரிக்கைகளாக கூறி, அதனை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினோம். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமொழி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதாவை செல்போனில் தொடர்பு கொண்டு, பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து பள்ளிக்கு அமுதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களில் சிலர் சென்றனர்.

அப்போது தலைமை ஆசிரியை மணிமொழி கலந்தாய்வு கூட்டத்தில் எப்படி என்னிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம் என்று ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அந்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்து, அவரை பணியிட மாறுதல் செய்யக்ேகாரி, நாங்கள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம், என்று கூறியிருந்தனர். மேலும் நடவடிக்கை இல்லையென்றால் அம்மாபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமொழியிடம் கேட்டபோது, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மீது சான்றிதழின்றி பணிபுரிவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த புகார்களை வாபஸ் பெறச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த ஆசிரியருக்கு ஆதரவாக, அவரது தூண்டுதலின்பேரிலும் என் மீது பொய் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளார், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்