பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவ-மாணவிகள் மனு

பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மாணவ-மாணவிகள் மனு அளித்தனர்.

Update: 2022-07-04 19:23 GMT


பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மாணவ-மாணவிகள் மனு அளித்தனர்.

குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மணிகண்டம் நாகமங்கலம் ஊராட்சி காந்திநகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், ஊர்முக்கியஸ்தர்கள் திருச்சி கலெக்டரிடம் அளித்த மனுவில், நாங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த 2001-ம் ஆண்டு மாவட்ட கலெக்டரால் குழு அமைக்கப்பட்டு பல்வேறு வகையான விசாரணைகள் நடத்தப்பட்டு எங்களுக்கு இந்து ஆதியன் பழங்குடியின வகுப்பு சான்று வழங்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு மீண்டும் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு எங்களுக்கு இந்து ஆதியன் பழங்குடியின வகுப்பு சான்று வழங்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள். ஆகவே சாதிசான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அடிப்படை வசதிகள்

லால்குடி கீழ்அன்பில் அரசு ஆதிதிராவிடர்நலத்துறை மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டமாணவ-மாணவிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள்பள்ளியில் 3 ஆண்டுகளாக போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் எங்கள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எங்கள் பள்ளியில் குடிநீர் வசதி கிடையாது. கழிவறையும் சரியாக இல்லை. இது குறித்து தலைமையாசிரியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே உரிய ஆசிரியர்களை நியமித்தும், எங்கள் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், கல்வி உதவித்தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தமிழ்ப்புலிகள்கட்சி மத்தியமண்டல செயலாளர் ரமணா அளித்த மனுவில், 'துறையூர் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பள்ளியில் ஊட்டச்சத்து மாத்திரை கொடுத்ததில், உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். அந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சையைகூட அளிக்கவில்லை. எனவே அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

முற்றுகை

திருவெறும்பூர் கூத்தைப்பார் கிராமத்தை சேர்ந்த மக்கள் நலச்சங்கத்தினர் மனு அளிக்க திரளாக வந்து கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து ஒரு சிலரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர். அவர்கள் அளித்த மனுவில், 'பர்மா அகதிகளுக்காக கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் கூத்தைப்பார் கிராமத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் பர்மாகாலனி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

பர்மாகாலனியில் 60 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு தோராயப்பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1927 எஸ்.எல்.ஆர். ஆவணப்படி பதிவாகி உள்ள பட்டாதாரர்கள் இடத்தை 1987 யு.டி.ஆர். ஆவணத்தில் தவறாக ரெயில்வேதுறை பெயரில் பதிவாகி உள்ளது. இந்த தவறான பதிவை நீக்கி, குடியிருக்கும் மக்கள் பெயரில் குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்