சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளின் மறுசீரமைக்கும் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளின் மறுசீரமைக்கும் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-06-05 19:09 GMT

தனியார் தொழிற்சாலை மீது புகார்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது பெரம்பலூர் நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட ரெங்கா நகரில் வசிக்கும் பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் வசிக்கக்கூடிய குடியிருப்பு வாசிகளுக்கு தொந்தரவாகவும், சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தும் வகையிலும், முறையான அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் துணிமணிகள் தைத்து கொடுக்கும் தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

சமத்துவபுரம் மக்கள் மனு

வேப்பந்தட்டை தாலுகா, அயன்பேரையூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் சமத்துவபுரத்தில் தமிழக அரசின் நிதி உதவியின் கீழ் வீடுகள் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் மிகவும் சேதமடைந்த வீடுகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் எங்களால் வீடுகளை மறுசீரமைக்கும் பணிகளை தொடர முடியவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா, பேரளி வடக்கு தெருவை சேர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர் ராகவன் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் நெகிழி(பிளாஸ்டிக்) மீள வாங்கும் கொள்கை திட்டத்தினை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள வன காப்பு காடுகளை ஆக்கிரமித்து வரும் சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட அந்நிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

அரசு பள்ளிக்கு விருது

ேமலும் கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 262 மனுக்களை பெற்றார். மேலும் அவர், மரக்கன்றுகளை நடுதல், சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டதற்காக 2022-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தேர்வான டி.களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கரம் கொடு மனிதா அறக்கட்டளைக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலையினை வழங்கினார். அதிக அளவிலான மரக்கன்றுகளை நட்டு, மாணவ-மாணவிகளிடம் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி வரும் டி.களத்தூர் பள்ளியின் ஆசிரியர் புகழேந்தியை கலெக்டர் பாராட்டினார்.

பயனாளிகளுக்கு காசோலை

மேலும் மாற்றுத்திறனாளி மகனுடன் சிரமப்பட்டு வருவதால் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு விண்ணப்பித்த ரெங்கநாதபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமிக்கு கறவை மாடு வாங்குவதற்கு ரூ.90 ஆயிரத்திற்கான காசோலையினையும், பீல்வாடியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு ரூ.1 லட்சம் கல்வி கடன் உதவிக்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்