தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
குருத்தோலை ஞாயிறையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக நடந்த பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.;
குருத்தோலை ஞாயிறையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக நடந்த பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் மேற்கொண்டதாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கழுதை குட்டியின் மீது அமர்ந்தபடி, ஜெருசலேம் நகருக்கு வந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் 'தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா' என்று முழங்கியபடி அவரை வரவேற்றனர்.
மேலும் துணிகளை தரையில் விரித்தும், மரக்கிளைகள், குருத்தோலைகளை கையில் ஏந்தியபடியும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
சிறப்பு திருப்பலி
குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். அதற்கு முன்பாக குருத்தோலை பவனியும் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. குருத்தோலை ஞாயிறையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக குருத்தோலை பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி தேவாலயத்துக்கு பவனியாக சென்றனர்.
கிறிஸ்துநாதர் ஆலயம்
சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தேவாலயத்தில் ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர் டேவிட் தலைமையில் சிறப்பு நற்கருணை ஆராதனை நடந்தது. முன்னதாக தேவாலயத்தில் இருந்து குருத்தோலை பவனி நடந்தது. பெரியார் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக சென்ற ஊர்வலம், மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.
இதில் ஆயர் ஆண்ட்ரூஸ், உதவி ஆயர் கிருபாவதி மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கீர்த்தனைகளை பாடியபடி, குருத்தோலைகளை கையில் ஏந்தி கலந்து கொண்டனர். தொடர்ந்து தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, நெல்லையில் இருந்து வந்த 25-க்கும் மேற்பட்ட கலைஞர்களால் தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டது.
ஓசன்னா
சேலம் கோட்டை சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவாலயத்தில் ஆயர் எழில் ராபர்ட் கெவின் தலைமையிலும், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இம்மானுவேல் தேவாலயத்தில் ஆயர் தானு பிள்ளை தலைமையிலும், சூரமங்கலம் சி.எஸ்.ஐ. திரித்துவ தேவாலயத்தில் ஆயர் சாந்தி பிரேம் குமார் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக நடந்த குருத்தோலை பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, ஓசன்னா பாடல்களை பாடியபடி சென்றனர்.
இதேபோல் ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் தேவாலயம், செவ்வாய்பேட்டை ஜெயராக்கினி தேவாலயம், அழகாபுரம் புனித மைக்கேல் தேவாலயம் உள்பட சேலம் மாநகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு பிரார்த்தனையும், குருத்தோலை பவனியும் நடந்தது.
ஆத்தூர்
ஆத்தூர் அன்னை ஜெயராக்கிணி ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி நடந்தது. பங்கு தந்தை கிரகோரிராஜன் குருத்தோலை பவனிக்கு தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை புனித சூசையப்பர் பள்ளியில் இருந்து தொடங்கிய பவனி ஆத்தூர் நகரில் முக்கிய வீதிகள் வழியாக சென்று அன்னை ஜெயராக்கினி ஆலயத்தில் முடிவடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
எடப்பாடி
எடப்பாடிைய அடுத்த வெள்ளாண்டி வலசு செல்வநாயகி ஆலயத்தில் நேற்று குருத்தோலை பவனி நடந்தது. பங்குத்தந்தை பிரான்சிஸ் ஆசைதம்பி தலைமையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பவனி எடப்பாடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி புனித செல்வநாயகி ஆலயத்தை வந்தடைந்தது. பவனியில் சென்றவர்களுக்கு இந்து மக்கள் மோர், இளநீர், பழரசம் கொடுத்து வரவேற்றனர்.
முன்னதாக அந்த பகுதியில் உள்ள மாற்று மதத்தினரை அழைத்து வந்து அவர்களுக்கு பூ, பழம் வழங்கி மரியாதை செய்து பவனி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.