விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தியானம் செய்தார். இது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என அவர் கருத்து தெரிவித்தார்.

Update: 2023-03-18 22:45 GMT

ஜனாதிபதி வருகை

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக கேரள மாநிலம் வந்தார். அதைத்தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று காலை 9 மணிக்கு கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்தார்.கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வந்து இறங்கிய அவரை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத்தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. மற்றும் அதிகாரிகளும் ஜனாதிபதியை வரவேற்றனர்.

விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார்

இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலம் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்துக்கு வந்தார். அதன்பிறகு அவர் அங்கிருந்து படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு புறப்பட்டார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி, கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ் மற்றும் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சென்றனர்.

மறக்க முடியாத அனுபவம்

விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள விவேகானந்தர் சிலை, தியான மண்டபம் ஆகியவற்றை ஜனாதிபதி திரவுபதி முர்மு 20 நிமிடங்கள் பார்வையிட்டார். மேலும் சிறிது நேரம் அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து அவர் தியானம் செய்தார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் அவர் ஆங்கிலத்தில் தனது கருத்தை பதிவு செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்கு சென்றது எனக்கு மறக்க முடியாத அனுபவம். ஆன்மிகம் நிறைந்த வளாகத்தை கட்டுவதற்கு பின்னால் இருந்த மறைந்த ஏக்நாத் ரானடேஜியின் மகத்துவத்தைக் கண்டு வியக்கிறேன். சுவாமி விவேகானந்தரின் மகத்தான பணியை இந்த இடத்தில் உணர்ந்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன். விவேகானந்த கேந்திரத்தின் செயல்பாடுகள் மூலம் விவேகானந்தரின் செய்தியை பரப்பும் மக்களின் பக்தியைப் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

பாரதமாதா கோவிலில் வழிபாடு

பின்னர் அங்கிருந்து அதே படகு மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்துக்கு வந்த அவர் கார் மூலம் விவேகானந்தா கேந்திராவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரை கேந்திர நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அங்குள்ள ராமாயண கண்காட்சி கூடத்தை பார்வையிட்ட அவர் பாரதமாதா கோவிலில் வழிபாடு செய்தார்.

அதன் பிறகு கார் மூலம் மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு தான் வந்த ஹெலிகாப்டரிலேயே மீண்டும் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டார். கன்னியாகுமரியில் காலை 9 மணி முதல் 10.50 மணி வரை ஜனாபதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் செய்தார். அதாவது 1 மணி நேரம் 50 நிமிடம் வரை அவர் குமரியில் இருந்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரியில் அவர் வந்து சென்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுதளம், விவேகானந்தர் மண்டபம், விவேகானந்தா கேந்திரா வளாகம், ஜனாதிபதி கார் வந்து சென்ற சாலைப் பகுதிகள் ஆகியவற்றில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன் தலைமையில் வெளி மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்