"பிரதமர் மோடி நாட்டைத் தன் குடும்பமாக பார்க்கிறார்" - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

பிரதமர் மோடி நாட்டைத் தன் குடும்பமாக பார்க்கிறார் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

Update: 2023-02-12 08:19 GMT

சென்னை,

பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

உலகத்தின் உயர்ந்த மொழி தமிழ். 'மோடி@20' மற்றும் அம்பேத்கர்&மோடி என்ற 2 புத்தகங்களும் தமிழ் மொழியில் வெளியிடப்படுவது பெருமைக்குரியது. அண்ணல் அம்பேத்கர் மிகச் சிறந்த தேசியவாதி. சமூகநீதி, சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து சிந்தித்தவர். பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்தவர்.

பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன். இதுவரை அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை மட்டுமல்ல, சமூக பிரச்னைகளுக்கு முன் நின்றவர். பள்ளிகளில் இருந்த பிரிவினை, கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்டவற்றை எதிர்த்தவர்.

பட்டியலின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 7% பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். சமூகநீதி பற்றி அதிகம் பேசுகிறோம், ஆனால் நடப்பது அதற்கு மாறாக உள்ளது. குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது உள்ளிட்ட செயல்கள் இன்றும் நடக்கின்றன. கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற சம்பவங்களும் தொடர்கின்றன. இது வருத்தமளிக்கிறது.

பிரதமர் மோடி நாட்டைத் தன் குடும்பமாக பார்க்கிறார். ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் உணவு அளிக்க செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் உரையை இன்று உலகமே உற்றுநோக்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்