பொறியியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடக்கம் - அமைச்சர் பொன்முடி

பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது.

Update: 2022-08-27 07:22 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான கலந்தாய்வு கடந்த 20-ந்தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடந்து முடிந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 25-ந்தேதி முதல் பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவு வெளியாகாததால், பொது கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 'நீட்' தேர்வு முடிவு குறித்த அறிவிப்பை தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதில் நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 13- ந் தேதி நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, செப்டம்பர்-10 முதல் செப்டம்பர்-12 வரை முதல் கட்ட கலந்தாய்வும், செப்டம்பர்-25 முதல் செப்டம்பர்-27 வரை இரண்டாவது கட்ட கலந்தாய்வும் , அக்டோபர்-13 முதல் அக்டோபர்-15 வரை மூன்றாவது கட்ட கலந்தாய்வும், அக்டோபர்- 29 முதல் அக்டோபர்- 31 வரை நான்காவது கட்ட கலந்தாய்வும் நடைபெறும். கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்