ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி பள்ளி மாணவி உடலை வாங்க மறுப்பு

திருவொற்றியூர் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி பள்ளி மாணவி உடலை தாய் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.

Update: 2023-02-19 08:18 GMT

திருவொற்றியூர் ராஜா கடை திருச்சினாங்குப்பம் சாலை பகுதியில் வசித்து வருபவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (வயது 16). இவர், சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நந்தினி மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 14-ந்தேதி அபிநயா, காது வலிக்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலை சண்முகம் பூங்கா அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அபிநயாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அபிநயாவின் உறவினர்கள், திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சையால்தான் மாணவி அபிநயா இறந்ததாக கூறி, தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ஜான் ஆல்பர்ட், திருவொற்றியூர் உதவி கமிஷனர் முகமது நாசர் ஆகியோர் மாணவியின் பிரேத பரிசோதனைக்கு பிறகு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் மாணவி அபிநயாவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. ஆனால் பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்க வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வீடியோ எடுக்கப்படவில்லை என காரணம் கூறி மாணவியின் உடலை வாங்க தாய் மற்றும் உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக அபிநயா குடும்பத்தினர் கோர்ட்டை நாடி உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து சண்முகம் பூங்கா அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்