390 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி தொடங்கியது
விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 390 வீடுகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
விழுப்புரம்:
விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வி.மருதூர் ஏரி. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி 114 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரியை ஆக்கிரமித்து சின்னப்பா நகரில் 109 பேரும், மணி நகரில் 39 பேரும், இந்திரா நகரில் 88 பேரும், ராஜீவ்காந்தி நகரில் 60 பேரும், பெருமாள் நகரில் 37 பேரும், காளியம்மன் நகரில் 38 பேரும், பிள்ளையார் கோவில் தெருவில் 19 பேரும் ஆக மொத்தம் 390 பேர் வீடு கட்டியுள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்புகளால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்கு நாள் சுருங்கி தற்போது வெறும் 70 ஏக்கர் பரப்பளவு மட்டுமே ஏரி உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 390 வீடுகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கியும், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
அகற்றும் பணி தொடக்கம்
இதனை தொடர்ந்து இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக 3 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், ஆயுதம் தாங்கிய போலீசார் என 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.இதையடுத்து காலை 7 மணியளவில் விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
அதிகாரிகளிடம் வாக்குவாதம்
இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள், தங்களுடைய வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியவாறும், வீடுகளை அகற்ற விடாமல் அந்த பொக்லைன் எந்திரங்களை தடுத்து நிறுத்தியும் அங்கிருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அதோடு தங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு வீடுகளை அகற்றுமாறும் அவர்கள் முறையிட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நீடித்தது.
இதனிடையே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஏற்கனவே பலமுறை நோட்டீசு அனுப்பி காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதால் அந்த உத்தரவின் அடிப்படையிலேயே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்துள்ளோம், எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தடுத்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகளும், போலீசாரும் எச்சரித்தனர்.
தரைமட்டமான வீடுகள்
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடங்கி நடைபெற்றது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.