திருமயம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கை மீட்டுத்தர கோரிக்கை

திருமயம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை மீட்டுத்தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-01 19:31 GMT

குப்பைக்கிடங்கு ஆக்கிரமிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு திருமயத்தில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் உள்ளது. இந்த இடத்தை கடந்த 1965-ம் ஆண்டு முதல் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக பயன்படுத்தி வருகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபர்கள் சிலர் குப்பைக்கிடங்கை சுத்தம் செய்து சுமார் 19 ஏக்கர் நிலத்தில் முள்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் மற்றும் உறுப்பினர்கள் குப்பைக்கிடங்கை ஆக்கிரமிப்பு செய்தவர்களை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.

பட்டா பெற்றுள்ளனர்

ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த இடத்தை பட்டா செய்துள்ளதாகவும், இதனால் தற்போது இந்த இடம் எங்களுக்கு சொந்தம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. மற்றும் திருமயம் தாசில்தாருக்கு மனு அளித்தார். மேலும் இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஊராட்சி சார்பில் மனு கொடுத்து பல நாட்களாகியும் விரைந்து விசாரணை செய்து முறையான அறிக்கை ஊராட்சி நிர்வாகத்திடம் இதுவரை வழங்கவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கோரிக்கை

இதனிடையே ஊராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கை மீட்டுத்தரக்கோரி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் திருமயத்தில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாமல் பெரும் இன்னல்களை ஊராட்சி நிர்வாகம் சந்திக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்