ரூ.1¾ கோடியில் சூழல் சுற்றுலா மையம்
கொடைக்கானல் மன்னவனூரில், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.1¾ கோடியில் சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்பட உள்ளது.;
கொடைக்கானல் தாலுகா மேல்மலை கிராமமான மன்னவனூரில், வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ரூ.1¾ கோடி செலவில் மன்னவனூரில் மேலும் சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு சாகசங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இதற்காக மன்னவனூரில், வருவாய்த்துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் சுற்றுலாத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது வேலுசாமி எம்.பி., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. முருகேசன், கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கருமலைப்பாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.