கோவை பெண்ணிடம் ரூ.15¾ லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.15¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-01 19:15 GMT
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி தீனாசுதா (வயது 33). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராமில் குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து தனது விவரங்களை பதிவு செய்தார்.


பின்னர் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை ஆராத்யா என அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து அவர் தாங்கள் கொடுக்கும் இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் ஓட்டல் குறித்து ரிவ்யூ செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும், நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப கமிஷன் தொகை அதிகமாக கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினார்.


இதனை உண்மை என்று நம்பிய தீனாசுதா முதலில் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.11 ஆயிரம் அனுப்பி அவர் கொடுத்த டாஸ்க்கை ஆன்லைனில் செய்து முடித்து கொடுத்தார். இதற்காக அவருக்கு கமிஷன் தொகையுடன் சேர்த்து ரூ.20 ஆயிரத்து 274 கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் ரூ.17 ஆயிரத்து 324 முதலீடு செய்தார். அதற்கு ரூ.40 ஆயிரத்து 456 கிடைத்தது. இதைத்தொடர்ந்து தீனாசுதாவை தொடர்பு கொண்ட அதே நபர் நாங்கள் கொடுக்கும் டீலக்ஸ் டாஸ்க்கில் பணம் முதலீடு செய்தால் இதைவிட அதிக பணம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.


இதையடுத்து தீனாசுதா அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் சிறிது, சிறிதாக ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு கமிஷன் தொகை எதுவும் கிடைக்கவில்லை. அந்த நபரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தீனாசுதா இதுதொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்