பள்ளி மாணவர்கள் வண்ண கலைப்பொருட்களை செய்து அசத்தல்

பள்ளி மாணவர்கள் வண்ண கலைப்பொருட்களை செய்து அசத்தினர்.;

Update:2022-07-14 00:38 IST

வெள்ளியணையில் 1961-ம் ஆண்டு அரசு உயர்நிலை பள்ளியாக தொடங்கப்பட்டு, 1978-ம் ஆண்டு மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது 550 மாணவர்களுடன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக ஆசிரியர்கள் பல்வேறு செயல்பாடுகளை கற்றுத்தந்து வருகின்றனர். அந்த வகையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துசாமியின் வழிகாட்டலில், தையல் ஆசிரியை மாரியம்மாள், ஓவிய ஆசிரியை பானுமதி ஆகியோர் மாணவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களைக்கொண்டு பல்வேறு வண்ண வண்ண கைவினை பொருட்களை செய்ய கற்று கொடுத்தனர்.அதை ஆர்வமுடன் கற்று கொண்ட மாணவர்கள் குளிர்பானங்கள், இளநீர் போன்றவற்றை அருந்த பயன்படும் மக்காத பொருளான ஸ்ட்ராவை பயன்படுத்தி வண்ண வண்ண ரிப்பன்களை கொண்டு பொக்கே தயாரித்தனர். இதே போல் பிளாஸ்டிக் வயர்களை கொண்டு பூஜை கூடைகள், டியூப் குடைகள், பஞ்சு மூலம் பொம்மைகள், துணிகளில் எம்ராய்டிங், காலண்டர் அட்டைகளில் கிளாஸ் பெயிண்டிங், தலைவர்களின் வண்ண படங்கள் வரைதல் என மாணவர்கள் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு செய்தும், வரைந்தும் அசத்துகின்றனர். பொதுவாக இந்த மாதிரி கலை பொருட்களை செய்வதில் மாணவிகளே அதிக ஆர்வம் காட்டுவர். ஆனால் இங்கு படிக்கும் மாணவர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மாணவர்களின் இந்த படைப்புகளை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமிர்தலிங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் பார்வையிட்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்