முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.1 லட்சத்தில் ஸ்கூட்டா்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர்களை கலெக்டர் சாரு ஸ்ரீ வழங்கினார்.

Update: 2023-06-24 19:30 GMT

நிவாரண தொகை

திருவாரூர் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 500 மதிப்பிலான சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டரும், 1 நபருக்கு விபத்து மரணம் நிவாரண தொகையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் கலெக்டர் வழங்கினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. மன வளர்ச்சி குன்றியோர், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவடமரப்பு நோய் ஆகிய நாள்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டம்

சிறு, குறு, நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வதற்கு வங்கிகடன் மானியமும், 18 வயதிற்கு மேற்பட்ட பார்வைதிறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டமும், மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.

ஊன்றுகோல், 3 சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், 9-ம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலும் பார்வை குறையுடைய மாணவ, மாணவிகளுக்கு எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறைஅலுவலர் புவனா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்