உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பெண் நடத்திய கிளீனிக்கிற்கு 'சீல்'
மருத்துவ ஊழியர் ஒருவரை நோயாளி போல் அனுப்பி வைத்து பெண் ஒருவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்ததை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட கிளீனிற்க்கிற்கு சீல் வைத்தனர்.;
திருப்பூர்,
தாராபுரம் அருகே மருத்துவ துறை அதிகாரிகள், மருத்துவ ஊழியர் ஒருவரை நோயாளி போல் அனுப்பி வைத்து பெண் ஒருவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்ததை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட கிளீனிற்க்கிற்கு சீல் வைத்தனர்.
மருத்துவ அதிகாரிகள் குழு ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல், உரிய கல்வித்தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிக்கும் நபர்களை கண்டறியும் வகையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் மருத்துவ அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி கலெக்டரிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி தலைமையில் டாக்டர் அருண்பாபு, அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் ஆகியோர் தாராபுரம் தாலுகா கொங்கூரை அடுத்த தாசநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதிகாரிகள், அங்கிருந்த ஒரு கிளீனிக்கிற்கு மருத்துவ ஊழியர் ஒருவரை நோயாளி போல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ ஊழியர் வயிற்றுவலி என்று கூறியதும், அங்கிருந்த பெண் ஊசியை செலுத்துவதற்கு தயாரானார். அதற்குள் மருத்துவ குழுவினர் அங்கு உள்ளே புகுந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண் முறையான கல்வி தகுதி இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
கிளீனிக் சீல் வைப்பு
மேலும் விசாரணையில், அவர் தனலட்சுமி (வயது 58) என்பதும், கடந்த 7 வருடமாக அந்த பகுதியில் கிளீனிக் அமைத்து சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. அலோபதி மருத்துவ படிப்பு படித்ததற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. மேலும் படிப்பு ஆவணங்களின் நகல்களை மட்டுமே வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த கிளீனிக்கில் அலோபதி மருந்து மாத்திரைகள் அதிகம் இருந்தன.
இதைத்தொடர்ந்து இணை இயக்குனர் தலைமையிலான குழு, தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், கிராம நிர்வாக அதிகாரி ராசாத்தி ஆகியோர் முன்னிலையில் கிளினீக்கை பூட்டி சீல் வைத்தனர்.
விசாரணை
இது குறித்து இணை இயக்குனர் கனகராணி கூறும்போது, உரிய மருத்துவப்படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்ததை தொடர்ந்து உடனடியாக கிளீனிக்கை பூட்டி சீல் வைத்துள்ளோம். மேலும் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் தனலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் அவர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.