சாலை வசதி செய்து தரக்கோரி ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தைபொதுமக்கள் முற்றுகை

சாலை வசதி செய்து தரக் கோரி பொதுமக்கள் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2023-10-04 19:30 GMT

ஏரியூர்:

சாலை வசதி செய்து தரக் கோரி பொதுமக்கள் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அடிப்படை வசதி

ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னேரி காடு பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த பகுதிக்கு சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

இந்த பகுதி மக்கள் சாலை அமைக்க வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு மற்றும் வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இதுவரை சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.

முற்றுகை போராட்டம்

இதனால் பாதிக்கப்பட்ட பொன்னேரி காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் சாலை வசதி செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்