கருங்கற்கள் குவியலில் பதுங்கி இருந்த 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு

கிருஷ்ணகிரியில் கருங்கற்கள் குவியலில் பதுங்கி இருந்த 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு சிக்கியது.

Update: 2023-01-03 18:45 GMT

கிருஷ்ணகிரி ஆனந்த நகர் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் புதிதாக ஒருவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக அவர் கருங்கற்களை கொட்டி குவித்து வைத்திருந்தார். கட்டுமான பணிக்காக வந்த தொழிலாளர்கள், அந்த குவியலில் இருந்து கற்களை எடுத்தனர். அப்போது அங்கு சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு இருந்ததை பார்த்து தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வன ஊழியர் கணபதி மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அது மிகவும் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு என தெரியவந்தது. இது குறித்து அவர்கள் கூறியதும், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து ஒரு சாக்கு பையில் போட்டு வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், இருக்கும் பாம்புகளிலேயே கொடிய விஷம் கொண்டது கண்ணாடி விரியன் பாம்பு தான். இதன் பல் ஊசி போன்று நீளமாக இருக்கும். இது கொத்துவதற்கு மட்டுமே அந்த பல்லை பயன்படுத்தும். அவ்வாறு கொத்தினால் அதன் விஷம் உடனடியாக மனித உடலுக்குள் சென்றுவிடும். இந்த பாம்பு கடித்து 4 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், மரணம் நிச்சயம் என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்