ஓமனில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 மீனவர்களை இந்தியாவிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ

மீனவர்களுடைய கேப்டன் பெத்தெலிஸ் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் மற்ற மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று வைகோ கூறியுள்ளார்.

Update: 2023-11-25 08:30 GMT

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பதினெட்டு மீனவர்கள், ஓமன் நாட்டைச் சேர்ந்த மசூர் (தொடர்பு எண்: +96899330063) என்பவரிடம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த 18 மீனவர்களும் ஓமனில் உள்ள DUQM துறைமுகத்தில் மசூருக்குச் சொந்தமான NOOH -1012 மற்றும் YAHYA -1184 ஆகிய இயந்திர படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர்.

மசூர் உரிய சம்பள பணத்தை மீனவர்களுக்கு வழங்காமலும், அவர்களைத் துன்புறுத்தியும் வந்துள்ளார். மேலும் மீனவர்களுக்கான சம்பள பாக்கியை மீனவர்களுடைய கேப்டன் பெத்தெலிஸ் மசூரிடம் கேட்டுள்ளார். அதன்பிறகு, நவம்பர் 15, 2023 அன்று, மசூரின் மேலாளர் தலைமையிலான குழுவினரால் பெத்தேலிஸ் அழைத்து செல்லப்பட்டு, சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் மற்ற மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் பெத்தேலிஸ் எங்கே? என்று மீனவர்கள் கேட்டதற்கு, பெத்தேலிஸுக்கு என்ன ஆனதோ அது உங்களுக்கும் நடக்கும் என்று மசூர் மிரட்டியுள்ளார். இந்தச் சூழலில், இனி ஓமனில் பணிபுரிவது பாதுகாப்பு இல்லை என மீனவர்கள் கருதுகின்றனர். மீனவர்கள் தங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு மசூரிடம் கேட்டுக் கொண்டனர்.

அவர்களை இந்தியாவுக்குத் திரும்ப அனுமதிப்பதற்குப் பதிலாக, மீனவர்களுக்கு தண்ணீரும் உணவும் இல்லாமல் பட்டினி போட்டு இருக்கிறார் மசூர். எனவே, பெத்தேலிஸ் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டதிலிருந்து விடுவிக்கப்படவும், ஓமனில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை இந்தியாவிற்குக் கொண்டுவரவும் இந்திய ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்