எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: 'ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் போக்கு' - திருமாவளவன் கண்டனம்

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்த போக்கை கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-14 14:55 GMT

சென்னை,

நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த வாலிபர்கள், வண்ணப் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பாதுகாப்பு பணியாளர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஜனநாயக கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்திற்குள் நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. தொடர்ந்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகிய தமிழ்நாடு எம்.பி.க்கள் உள்ளிட்ட 14 பேரும், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்த போக்கை கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "நாடாளுமன்றத்தில் 'கட்டுப்பாடற்ற நடத்தை' என்னும் பெயரில் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் அவர்களும், மக்களவையை சார்ந்த 14 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காலை அமர்வில் ஜோதிமணி, ரம்யா, குரியாகோஸ், பிரதாபன், ஹிபி ஈடன் ஆகிய 5 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்து பிற்பகலில் மாணிக்கம் தாகூர், கனிமொழி, பி.ஆர்.நடராஜன், வி.கே.ஸ்ரீகாந்தம், பெனி பஹான், கே.சுப்பராயன், எஸ்.ஆர். பார்த்திபன், சு.வெங்கடேசன், முகமது ஜாவேத் ஆகிய 9 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கவும் உள்துறை அமைச்சர் அது குறித்து அவையில் உரிய விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி குரல் எழுப்பியதற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இடைநீக்கத்தை விலக்கி அனைவரையும் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்