தாமிரபரணியை பாதுகாக்கப்பட்ட ஆறாக அறிவிக்க வேண்டும்

தாமிரபரணியை பாதுகாக்கப்பட்ட ஆறாக அறிவிக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Update: 2023-09-30 19:00 GMT

தென்திருப்பேரை:

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும், தாமிரபரணி தண்ணீரை பொதுமக்களுக்கு குடிநீருக்கு வழங்கிய பின்னர் இருக்கும் நீரை தொழிற்சாலைகளுக்கு வழங்க வலியுறுத்தியும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆழ்வார்திருநகரியில் தாமிரபரணி மீட்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் அய்கோ தலைமை தாங்கினார். கருத்தாளர் குயிலி நாச்சியார், பொருளாளர் எரேமியா முத்துராஜ், பிரபா, ஜெயபாலன், ரவீந்திரன், பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்க கருத்தாளர் வியனரசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மூலிகைகளால் பொதுமக்களை பாதுகாத்த தாமிரபரணி தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கப்பட்ட ஆறாக அறிவிக்க வேண்டும். ஆற்றில் கலக்கும் கழிவுகளை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் அனைத்தும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்