"கவர்னருக்கு எதிராக முதல் அமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தது மரபு அல்ல"- எடப்பாடி பழனிசாமி பேட்டி

கவர்னர் உரை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2023-01-09 09:00 GMT

சென்னை,

சட்டசபையில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி, 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது' என்ற வாக்கியத்தையும் கவர்னர் தவிர்த்துள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கவர்னரி உரையை கண்டித்து முதல் அமைச்சர் வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கவர்னர் உரை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் உரை என்பது ஆண்டு தொடக்கத்தில் அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள், கொள்கைகள் பற்றியதாகும். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் புதிய பெரிய திட்டங்கள் எதுவும் கவர்னர் உரையில் இடம் பெறவில்லை. அரசும், முதலமைச்சரும் தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொண்டு கவர்னர் மூலமாக சபாஷ் போட்டுக் கொண்டுள்ளனர்.

கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள சில விஷயங்களை படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்துள்ளது பற்றி நிருபர்கள் கேள்வியெழுப்பியதற்கு அவர் பதிலளிக்கையில், அப்படி யார் சொன்னது? அதுபற்றி எங்களுக்கு தெரியாது. நாங்கள் கவர்னர் உரையைத் தான் கேட்க வந்தோம். முதல் அமைச்சர் உரையை கேட்க வரவில்லை.

அச்சிடப்பட்ட கவர்னர் உரை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அது முதலமைச்சருக்கும் பொருந்தும். கவர்னரை அமர வைத்து கொண்டு முதல் அமைச்சர் அவ்வாறு பேசியது மரபுக்கு எதிரானது. அநாகரீகமானது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. போதை பொருள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்