திருடனை பிடித்து கொடுத்தும் கைது செய்யாத போலீசார்; பொதுமக்கள் குற்றச்சாட்டு

பெரம்பலூரில் திருடனை பிடித்து கொடுத்தும் போலீசார் கைது செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2022-11-06 18:46 GMT

பெரம்பலூரில் தீபாவளிக்கு பண்டிகைக்கு முன்பு தனியார் பஸ் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. அதனை ஊழியர்கள் அந்த தனியார் பஸ்சில் வைத்து விட்டு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடிக்க சென்று உள்ளனர். அப்போது பஸ்சில் வைத்திருந்த ஊழியர்களின் போனஸ் தொகை காணாமல் போனது. மேலும் பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் போனஸ் தொகை திருடிய நபரின் உருவம் பதிவாகியிருந்தது. மேலும் இது குறித்து ஊழியர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அதே நபர், அதே பஸ்சில் டிரைவர், கண்டக்டர் டீ குடிக்க சென்ற போது பஸ்சில் எதையோ திருட முயன்றுள்ளார். இதனை கண்ட பஸ் டிரைவர்-கண்டக்டர் உடனடியாக ஓடி வந்து அந்த நபரை கையும், களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க அழைத்து சென்றனர். ஆனால் நேற்று மாலை பெரம்பலூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றதால் பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்று விட்டதால் போலீஸ் நிலைய பணிக்கு போதியளவு போலீசார் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த போலீசார் திருடனை கைது செய்யாமல், அவர்களிடம் காத்திருங்கள் அல்லது திருடனை அழைத்து சென்று திருப்பி அழைத்து வாருங்கள் என்று கூறியதாக தெரிகிறது. அவர்களும் திருட்டில் ஈடுபட்ட நபரை வைத்து கொண்டு நீண்ட நேரம் காத்திருந்தனர். போலீசாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் திருடனை அழைத்து சென்று விட்டனர். நேற்று பெரம்பலூரில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஐி, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வல பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கையும், களவுமாக பிடித்து ஒப்படைக்க வந்த திருடனை போலீசார் கைது செய்யாமல் விட்டுவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்